கொல்கட்டா: வங்காள விரிகுடா கடலில் மாயமான மேற்கு வங்க மீனவர்களில் 9 பேர், அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் சங்கர்பூர் கடற்கரையிலிருந்து ஜூலை 2 அன்று மீன்பிடிக்க கடலுக்கு சென்ற அவர்கள், 10 முதல் 12 நாட்கள் வரை கடலில் தங்கி மீன்பிடிக்க திட்டமிட்டிருந்தனர். ஜூலை 7 வரை கடல் சீற்றமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து, மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தியது.

பல படகுகள் கரை திரும்பிய நிலையில், சங்கர்பூரிலிருந்து 15 பேர் சென்ற படகு மட்டும் திரும்பாததால் உறவினர்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து கடலில் தீவிர தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

தேடுதலின்போது, தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டம் பாகேர்ச்சார் கடற்கரையிலிருந்து சுமார் 5 கிமீ தொலைவில் படகின் பாகங்கள் மிதப்பதாக தகவல் கிடைத்தது. அந்தப் பகுதியில் மேற்கொண்ட சோதனையில் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மீதமுள்ள 6 மீனவர்களை கண்டுபிடிக்க தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.