‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பை தொடங்கியுள்ள அண்ணாமலை, 2031 தமிழக சட்டசபை தேர்தலை மையமாக வைத்து செயல்படுகிறார்; அவரது அரசியல் கட்சி தொடக்கம் இரண்டு ஆண்டுகள் வரை நீளலாம் என ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

பா.ஜ.க.வில் இருந்து விலகிய பின், ‘வீ தி லீடர்ஸ்’ என்ற அமைப்பை அவர் உருவாக்கினார். அதன் சார்பில் பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநாட்டில், ஆளும் த.வெ.க. மற்றும் எதிர்க்கட்சியான தி.மு.க. ஆகியவற்றை நேரடியாக விமர்சிக்காமல் பேசினார்.

மாறாக, த.வெ.க. அரசின் அமைச்சர்கள் புதியவர்கள் என்பதால் ஆரம்பத்தில் தடுமாற்றம் இருக்கலாம் என்றும், அவர்களை அழுத்தாமல் தாங்கி நிற்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், த.வெ.க. அரசை ஓராண்டுக்கு விமர்சிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

2031ல் தமிழக மக்களின் முன் தனது அரசியல் கட்சி நிற்கும்; அப்போது மக்கள் வாய்ப்பு தருவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். இதன் மூலம், 2031 சட்டசபை தேர்தலில்தான் போட்டியிடும் நோக்கம் தெளிவாகிறது என ஆதரவாளர்கள் கூறினர்.

ஆதரவாளர்களின் தகவலின்படி, இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், லோக்சபா தேர்தல் ஆகியவற்றில் போட்டியிடும் எண்ணம் இப்போது இல்லை. அக்டோபர் 15 முதல் ஓராண்டுக்குள் 1.5 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, அடுத்த ஓராண்டுக்குள் 50 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களை சேர்த்து அமைப்பை பலப்படுத்துவது தற்போதைய திட்டம் என்றும், அரசுக்கு மக்களிடம் அதிருப்தி உருவாகும் வரை காத்திருந்து பின்னர் விமர்சனத்தை தீவிரப்படுத்தலாம் என்றும் அவர்கள் கூறினர்.