ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சி (என்.சி.) எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜ. முயன்றதாக கூறிய கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால், ரூ.100 கோடி இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடரப்படும் என பா.ஜ. எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் ஒமர் அப்துல்லா தலைமையில் என்.சி. ஆட்சி நடைபெற்று வருகிறது. ஸ்ரீநகரின் ஹஸ்ரத்பாலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தன் கட்சியில் பிளவை ஏற்படுத்தி அரசை கவிழ்க்க பா.ஜ. முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

அதன் ஒரு பகுதியாக, பா.ஜ. நிர்வாகி ஒருவர் என்.சி. எம்.எல்.ஏ. ஒருவரை அணுகி ரூ.30 கோடி வரை பேரம் பேசியதாகவும், அமைச்சர் பதவி உள்ளிட்ட பலன்களை பெற்றுத் தருவதாக உறுதி அளித்ததாகவும் அவர் கூறினார்.

இந்த குற்றச்சாட்டுகள் முழுக்க பொய்யும் ஆதாரமற்றவையும் என பா.ஜ. மறுத்துள்ளது. கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி, ஒமர் அப்துல்லாவுக்கு சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பா.ஜ. ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தலைவர் சத்பால் சர்மாவின் அறிவுறுத்தலின் பேரில் அனுப்பப்பட்ட நோட்டீஸில், குற்றச்சாட்டுகளை எழுத்துப்பூர்வமாக வாபஸ் பெறவும், 7 நாளுக்குள் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால் சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களின் கீழ் ரூ.100 கோடி அவதூறு வழக்கு தொடரப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.