லண்டனில் இருந்து சென்னைக்கு வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், திங்கட்கிழமை அதிகாலை தரையிறங்கும் இறுதி கட்டத்தில் பறவை மோதலுக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டாலும், விமானத்தில் இருந்த 224 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்கள் என மொத்தம் 236 பேரும் பாதுகாப்பாக இருந்தனர்.

சுமார் 500 அடி உயரத்தில் வேகத்தை குறைத்து தரையிறங்க தயாராக இருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. விமானி விமானத்தை பாதுகாப்பாக ஓடுபாதையில் இறக்கினார்; பின்னர் பொறியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஓடுபாதை பகுதியில் விமானத்தை ஆய்வு செய்து சேதத்தை உறுதி செய்தனர்.

பராமரிப்பு பணிகள் முடியும் வரை விமானம் மீண்டும் புறப்படும் நிலை இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், சென்னை–லண்டன் வழித்தடத்தில் அதிகாலை 5.35 மணிக்கு புறப்பட வேண்டிய விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் 268 பயணிகள் பாதிக்கப்பட்டு, அவர்கள் நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தை ஒட்டிய கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளிலும், அடையாறு ஆற்றின் கரையோரத்திலும் திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுவது பறவைகளை ஈர்க்கும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பிளாஸ்டிக், மாமிச கழிவுகள், இறந்த உயிரினங்களின் உடல்கள் போன்றவை குவிவதால், பருந்து உள்ளிட்ட பறவைகள் வானில் வட்டமடித்து விமான இயக்கத்திற்கு அபாயம் உருவாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பறவை மோதல் சம்பவம் குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. விமான நிலையத்தைச் சுற்றிய 10 கி.மீ. சுற்றளவில் திறந்தவெளி குப்பை கிடங்குகள் இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் உள்ளபோதும், குப்பை கொட்டல் தொடர்ந்தால் பெரிய விபத்து அபாயம் அதிகரிக்கும் என விமான போக்குவரத்து வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.