கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும், அந்த 54 பேரையும் உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த நியமனங்கள் 2021-ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி. வேலுமணி இருந்த போது நடைபெற்ற தேர்வைத் தொடர்ந்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 69 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 654 பேர் விண்ணப்பித்த நிலையில், 440 பேர் நேர்முகத் தேர்வு மற்றும் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு, இறுதியில் 54 பேர் நியமிக்கப்பட்டனர்.

இந்த நியமனங்களை எதிர்த்து, தூய்மை பணியாளராக நியமிக்கப்பட்ட ஈஸ்வரி உள்ளிட்ட சிலர் வழக்கு தொடர்ந்தனர். ஆரம்பத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மேல்முறையீடு செய்தனர்.

மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் செந்தில்குமார் அமர்வு, தேர்வாணையம் அல்லது நிர்ணயிக்கப்பட்ட தேர்வு நடைமுறைகளைப் பின்பற்றாமல் நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, இதை “புறவாசல்” நியமனம் எனக் கூறி ரத்து செய்தது. மேலும், உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நீதிபதி விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு 2021-ஆம் ஆண்டு செய்யப்பட்ட 54 இளநிலை உதவியாளர் நியமனங்கள் சட்டவிரோதம் எனத் தெரிவித்து, உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்ததுடன், 54 பேரையும் உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் எனத் தீர்ப்பளித்தது.