ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக பொய்யான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஒரு புத்தகத்தை வெளியிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
“ஆர்எஸ்எஸ் பிராமணன் பெரியாரிஸ்ட் ஆனேன்” என்ற தலைப்பில் ஜூலை 17-ஆம் தேதி புத்தகம் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் நலங்கிள்ளி; இவரின் இயற்பெயர் கிருஷ்ணசாமி தியாகராஜன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராமண குடும்பத்தில் வளர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்தவர், ஈவெரா கருத்துகளால் ஈர்க்கப்பட்டு பெரியாரிஸ்ட் ஆன அனுபவங்களை இந்த நூல் விவரிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வழக்கறிஞர் சண்முகம் அளித்த மனுவில், தாம் வழக்கறிஞராகவும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்எஸ்எஸ் உறுப்பினராகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த ஆசிரியர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் அல்ல என்றும், ஆர்எஸ்எஸ் பெயரை பயன்படுத்தி பொய்யான, தவறான மற்றும் அவதூறான கருத்துகளை வெளியிட அவருக்கு உரிமை இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
புத்தகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பை இழிவுபடுத்தும், வசைபாடும் வகையிலான கருத்துகள் இருப்பதாகவும், இதனால் மக்கள் மத்தியில் அமைப்பின் நற்பெயர் மற்றும் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் வெளியீடு அமையக்கூடும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, புத்தக வெளியீடு தொடர்பாக உடனடி விசாரணை நடத்தி, ஆசிரியர், வெளியீட்டாளர், அச்சிடுபவர் உள்ளிட்ட தொடர்புடையவர்களிடம் கையெழுத்துப் பிரதியுடன் ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுத்து, அமைப்பின் நற்பெயர் மற்றும் நன்மதிப்பை பாதுகாக்க உத்தரவுகள் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.





