த.வெ.க. அரசு ‘குதிரை பேரம்’ நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி சென்னை கிண்டி லோக்பவனில் கவர்னரிடம் மீண்டும் புகார் மனு அளித்தார். இதுவே இந்த விவகாரத்தில் கவர்னரிடம் திமுக அளிக்கும் இரண்டாவது மனுவாகும்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, முதல்வர் விஜய் குதிரை பேர ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி ஜூலை 4-ஆம் தேதி ஏற்கெனவே கவர்னரை சந்தித்து புகார் அளித்ததாக தெரிவித்தார்.

மேலும், அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வுக்கு சென்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தன்னை த.வெ.க.வில் சேருமாறு கேட்டதாக கூறி, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து பின்னர் த.வெ.க.வில் இணைந்ததாகவும், இதுபோன்ற நிகழ்வுகள் புகாருக்கு ஆதாரமாக இருப்பதாகவும் பாரதி கூறினார்.

கரூரில் முதல்வர் விஜய் பேசியது தொடர்பாகவும், கரூர் உயிரிழப்பு சம்பவத்தை விசாரிக்கும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணை குழுவிடமும், சி.பி.ஐ.யிடமும் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கரூர் அறநிலையத்துறை நிலம் தொடர்பான அரசாணை வெளியீட்டில் ‘நாடகம்’ நடத்தப்பட்டதாகவும், 10-ஆம் தேதி வெளியிட்டதாக காட்டப்பட்டாலும் 9-ஆம் தேதியே அரசாணை போடப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். குதிரை பேரம் புகாரில் கவர்னர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் அவர் கூறினார்.