சென்னை: தவெக ஆட்சி கவிழ்ப்பு விவகாரம் தொடர்பான ஆவணங்களை சென்னை போலீசார் அமலாக்கத்துறைக்கு (ED) வழங்கியுள்ளனர். வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவுக்கு ரூ.35 கோடி தருவதாக பேரம் பேசியதாக கூறப்படும் புகாரை தொடர்ந்து, திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த திருநாவுக்கரசு உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோரின் பின்னணி தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.60 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதே நேரத்தில், கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் அழைப்பு பதிவுகளை அடிப்படையாக கொண்டு மதுரையைச் சேர்ந்த கணேசன், ரகு உள்ளிட்ட மேலும் 4 பேரிடம் திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, விவரங்களை கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜூக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால் அமலாக்கத்துறை விசாரணை துரிதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





