சென்னை: 2025-26 நிதியாண்டில் நாடு முழுவதும் முறைகேடு புகார்கள் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக ரூ.81,000 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை (ஈ.டி.) முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார்களின் அடிப்படையில் பல்வேறு நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், அந்த வழக்குகளுடன் தொடர்புடைய சொத்துக்கள் முடக்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். முடக்கப்பட்ட சொத்துக்கள் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் சேராதவை என்பதை உரிமையாளர்கள் நிரூபித்தால், அவை விடுவிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடக்கப்பட்ட சொத்துகளில் குறிப்பிடத்தக்க பகுதி ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையுடன் தொடர்புடைய வழக்குகளிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. கருப்பு பணப் புழக்கம் அதிகம் எனக் கூறப்படும் இந்தத் துறையில் கண்காணிப்பை ஈ.டி. தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தகவல்.
கருப்பு பணத்தை மறைக்க பினாமி பெயர்களில் சொத்துகள் வாங்கப்படும் நடைமுறையும் இருப்பதாக ஈ.டி. சுட்டிக்காட்டுகிறது. சமீபத்தில் பதிவு செய்யப்படும் வழக்குகளில் ரியல் எஸ்டேட் சொத்துகளே அதிகமாக கண்டறியப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் மற்றும் திவால்-நொடிப்பு நிலை சட்டத்தின் கீழ் உரிமை விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டபோது, பல சொத்துகளின் உண்மையான உரிமையாளர் யார் என்பது தெளிவாகாத நிலை இருந்ததாகவும், அதே நேரத்தில் 2025-26ல் ரூ.81,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் ஈ.டி. தெரிவித்துள்ளது.





