கொல்கட்டா: ரயில்களில் காலியாக உள்ள படுக்கை வசதி (பெர்த்) இடங்களை லஞ்சம் பெற்று பயணிகளுக்கு வழங்கும் டிக்கெட் பரிசோதகர்கள் (டிடிஇ.) மீது அதிகபட்ச தண்டனை விதிக்கப்படுவதை அனைத்து ரயில்வே மண்டல பொது மேலாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என்று கொல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தக் கருத்து, 2009-ஆம் ஆண்டு நியூ ஜல்பாய்குரியில் இருந்து சீல்டா நோக்கிச் சென்ற டீஸ்டா டோர்ஸா எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த சம்பவம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையில் முன்வைக்கப்பட்டது. படுக்கை வசதி இல்லாத இரண்டு பயணிகள், டிடிஇ.க்கு லஞ்சம் கொடுத்து பெர்த் பெற்றதாக வழக்கில் கூறப்பட்டுள்ளது.
அதே பெட்டியில் பயணம் செய்த இரண்டு திருடர்கள், அந்த பயணிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்து தப்பியதாக தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே உடல்நலக் கோளாறுகள் இருந்த ஒரு பயணி மயக்க மருந்தின் தாக்கத்தை தாங்க முடியாமல் உயிரிழந்ததாகவும், மற்றொரு பயணி ஒன்பது நாள் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்ததாகவும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை ரயில்வே போலீசார் விசாரித்து, மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்ததாக கூறப்படும் திருடர்களை கைது செய்து, அவர்கள்மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றம் தனது உத்தரவில், சில டிடிஇ.க்களின் இத்தகைய தவறுகள் கடுமையான குற்றச் சம்பவங்களுக்கு அடிப்படை காரணமாக மாறக்கூடும் என்றும், பல சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வராமலேயே போய்விடும் என்றும் குறிப்பிட்டது.
இதனால், காலி பெர்த்களை லஞ்சம் பெற்று “விற்பது” போன்ற செயல்களில் ஈடுபடும் டிடிஇ.க்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், அதை ரயில்வே மண்டல தலைவர்கள் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





