கரூர் மாவட்டத்தில் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோவில், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், குப்புச்சிபாளையம் ரவீஸ்வரர் கோவில் மற்றும் வெஞ்சமாங்கூடலூர் விக்ருதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் சுமார் 3,084.95 ஏக்கர் நிலங்களைச் சுற்றி உள்ளது. இந்நிலங்கள் 15 கிராமங்களில் பரவி உள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சேலம் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், இந்த நிலங்களுக்கு 3,390 தனிநபர்கள் பெயரில் ரயத்துவாரி பட்டாக்கள் வழங்கப்பட்டதாகவும், பல ஆண்டுகளாக பத்திரப்பதிவுக்கு தடை இருந்த நிலையில், அதை ஜூலை 9 அன்று கலெக்டர் உத்தரவிட்டு நீக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் மற்றும் அரசின் முன் அனுமதி இன்றி கோவில் நிலங்களை பதிவு செய்ய அதிகாரிகள் வழிவகுத்துள்ளதாகவும், நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.25,000 கோடி எனவும் மனுதாரர் தெரிவித்தார். நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு மனுவை விசாரித்து, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 11க்கு ஒத்திவைத்தது.





