ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற இரண்டு கப்பல்களுக்கு ஈரான் படையினர் நடத்திய தாக்குதலில் ஒரு இந்திய கடற்பணியாளர் உயிரிழந்ததாகவும், மேலும் 10 பேர் காயமடைந்ததாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேற்காசியாவில் ஈரான்–அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் தொடங்கியுள்ள சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, அந்த வழியாக சென்ற எம்டி எல் பஹியாக் மற்றும் எம்டி மோம்பஸா கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இன்று காலை டில்லியில் உள்ள ஈரானின் துணைத்தூதருக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து, இந்தியாவின் வலிமையான கண்டனத்தை தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
கடல் பணியாளர்களை குறிவைக்கும் தாக்குதல்களையும், ஹார்முஸ் ஜலசந்தி போன்ற சர்வதேச நீர்வழிகளில் தடையற்ற மற்றும் பாதுகாப்பான போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் நடவடிக்கைகளையும் கடுமையாக கண்டிப்பதாக அமைச்சகம் தெரிவித்தது. மேலும், பிராந்தியத்தில் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கி மோதல் தீவிரமடைந்துள்ளதும் கவலை அளிப்பதாக கூறியது.
அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை உறுதி செய்யும் வகையில் வன்முறையை உடனடியாக நிறுத்தி, பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகளுக்கு திரும்ப வேண்டும் எனவும் வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது.





