தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான 56வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் (IPhO) தேர்வில் இந்தியா சிறப்பான சாதனை படைத்துள்ளது. இந்திய அணியில் பங்கேற்ற ஐந்து மாணவர்களும் தங்கப் பதக்கம் வென்ற நிலையில், அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அறிவியல், கணிதம், மொழித் திறன்களை மேம்படுத்தி, சர்வதேச போட்டிகளுக்கு தயார்படுத்தும் நோக்கில் ‘ஒலிம்பியாட்’ தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் பகுப்பாய்வு சிந்தனை, அறிவுத் திறன் மற்றும் போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில் இத்தேர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், வானியல் உள்ளிட்ட பாடங்களில் ஒலிம்பியாட் தேர்வுகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஒலிம்பியாட் செயல்பாடுகளை மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் (TIFR) கீழ் இயங்கும் ஹோமிபாபா அறிவியல் கல்வி மையம் (HBCSE) நடத்துகிறது.
இந்த ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற இயற்பியல் ஒலிம்பியாடில் வெற்றி பெற்ற ஐந்து பேர் கொலம்பியாவில் நடந்த IPhO தேர்வில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினர். இதில் இந்தியா உட்பட 87 நாடுகளைச் சேர்ந்த 381 மாணவர்கள் பங்கேற்றனர்.
மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த கனிஷ்க் ஜெயின், மும்பையைச் சேர்ந்த ஷ்ரேஷ்த் சுராயா, மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த ரித்தேஷ் ஆனந்த் பென்டாலே, டில்லி துவாரகா பகுதியைச் சேர்ந்த ரிஷித் கார்க், குஜராத்தின் ஆமதாபாதைச் சேர்ந்த ஸ்வரித் ஜோஷி ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். இந்த வெற்றியின் மூலம் ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளுடன் இணைந்து உலகளவில் முதலிடத்தை இந்தியா பகிர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





