பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கில், லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதுக்கு எதிராக ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் பெற முடியாத பிடிவாரண்டை பிறப்பித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 2025 ஏப்ரல் 22 அன்று பாகிஸ்தான் சார்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கரின் துணை அமைப்பாக குறிப்பிடப்படும் ‘தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்’ பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), கடந்த ஆண்டு டிசம்பரில் ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் 1,597 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. தொடர்ந்து, கூடுதல் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்து, அதில் ஹபீஸ் சயீதைக் குற்றவாளியாக சேர்த்துள்ளது.

அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் சயீது மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு எதிராக ஜாமீன் மறுக்கும் பிடிவாரண்டை நீதிமன்றம் பிறப்பித்தது.

இந்தியா மற்றும் அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீது, 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலின் முக்கிய சூத்திரதாரராகவும் குறிப்பிடப்படுகிறார்.