டெஹ்ரானுக்கு ரஷ்யா தனது அதிநவீன வான்வழி கட்டளை மைய விமானத்தை அவசர உதவியாக அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை சர்வதேச அரங்கில் கவனம் ஈர்த்துள்ளது.

மேற்காசியப் பகுதியில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் சூழல் உருவாகி பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மாஸ்கோ ஈரானுக்கு ராணுவ ஆதரவை அதிகரித்துள்ளது.

டெஹ்ரானுக்கு அனுப்பப்பட்ட விமானம் ‘டி.யு.-214பி.யு.’ எனப்படும் வான்வழி கட்டளை மையம். அவசர காலங்களில் வானிலேயே இருந்து போர் நடவடிக்கைகளை வழிநடத்த ரஷ்ய அதிபர் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ரஷ்யா விடுக்கும் நேரடி எச்சரிக்கையாகவும் சிலர் பார்க்கின்றனர்.

வழக்கமான பயணியர் விமானம் போல தோற்றமளித்தாலும், தரைவழி தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டாலும் செயற்கைக்கோள் இணைப்புகள் மற்றும் அதிநவீன ரேடியோ அலைவரிசைகள் மூலம் பாதுகாப்பாக ராணுவக் கட்டுப்பாட்டை தொடரும் தொழில்நுட்பம் இதில் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் மணிக்கு சுமார் 850 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடியதும், தொடர்ந்து 6,500 கி.மீ. வரை பயணிக்கும் திறன் கொண்டதுமாக கூறப்படுகிறது.