தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை உட்பட எந்த நாளிலும் பசு அல்லது கன்றுகளை வதைக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை வழங்கியுள்ளது.
கோவையைச் சேர்ந்த ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி கே. சூர்யா பிரசாந்த் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த விடுமுறை கால அமர்வு (நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமிநாராயணன்) இந்த உத்தரவை வழங்கியது. பக்ரீத் காலத்தில் பொது இடங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைத்து பசுக்கள் சட்டவிரோதமாக வதைக்கப்படுவதாக மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
அந்த உத்தரவில், முறையான உரிமம் பெற்ற இறைச்சிக் கூடங்களில் மட்டுமே விலங்குகளை வதைக்க வேண்டும் என்றும், மாநிலத்தில் பசு மற்றும் கன்றுகளை வெட்டக் கூடாது என்றும் கூறப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து தமிழக அரசு அவசரமாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு மனுவை விசாரித்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
மேலும், இந்த விவகாரத்தில் மனுதாரர் சூர்யா பிரசாந்த், தமிழக டி.ஜி.பி., கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் பதில் பெற நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





