சென்னை: உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியபோது விதித்த நிபந்தனைகளின்படி விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டியிருந்தும், தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆஜராகவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ரூ.35 கோடி தருவதாக பேரம் பேசியதாக கூறப்படும் விவகாரத்தில், சென்னையைச் சேர்ந்த திருநாவுக்கரசு உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது செய்யப்பட்டவர்களின் பின்னணியில் செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அனுப்பியும், ‘லுக் அவுட் நோட்டீஸ்’ வழங்கியும் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

பின்னர் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றனர். அதில், காலை மற்றும் மாலை என தினமும் இரு வேளையும் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் நீதிமன்ற உத்தரவு பிறந்து ஐந்து நாட்கள் கடந்தும் இருவரும் ஆஜராகவில்லை என போலீசார் கூறினர். இதனால், செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமின் உத்தரவை ரத்து செய்ய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.