திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட அகழாய்வுப் பணிகளை புதிய அரசும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழர் வரலாற்றுத் தடங்களைப் பாதுகாத்து உலகறியச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தான் வெளியிட்ட அறிக்கையில், தொடர்ந்து வெளிப்படும் தமிழர் தொன்மையின் சான்றுகளை பாதுகாப்போம்; தடங்கல்கள் வந்தாலும் வரலாற்று உண்மையை நிறுவுவோம் என அவர் கூறினார்.

தமிழரின் வரலாறும் பண்பாடும் குறைத்து பேசப்படுவதும், சிதைத்து எழுதப்படுவதும், திரிபுவாதங்களால் திசைதிருப்பும் முயற்சிகளும் நடைபெறும் சூழலில், உண்மைச் சான்றுகளுடன் தமிழ்த்தொன்மை வெளிப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இதற்கான உதாரணங்களாக கீழடி, பொருநை மற்றும் இரும்பின் தொன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளை அவர் சுட்டினார்.

மேலும், மண்ணுக்குள்ளும் ஆழ்கடலுக்குள்ளும் மறைந்திருக்கும் இன்னும் பல “கீழடிகள்” வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும், இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இத்தகைய முயற்சிகள் வரலாற்றில் பெருமிதம் கொள்ளச் செய்வதோடு, சான்றுகளின் அடிப்படையில் புதிய வரலாற்றுப் புரிதலை உருவாக்கும் வலிமையையும் தரும் என ஸ்டாலின் கூறினார்.