அயோத்தி ராமர் கோவிலுக்கான நன்கொடை தொடர்பாக எழுந்துள்ள நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் உத்தர பிரதேச சிறப்பு விசாரணை குழு (எஸ்.ஐ.டி.) தங்களின் விசாரணை முன்னேற்றம் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் அஜய் குமார் ராய், தினேஷ் குமார் யாதவ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. சுதாகர் சிங் தாக்கல் செய்த மூன்று பொதுநல மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிக்கலான நிதி முறைகேடுகளை கண்டறிய தேவையான அதிநவீன/தடயவியல் வசதிகள் எஸ்.ஐ.டி.-க்கு இல்லை என்றும், வழக்குப்பதிவு இல்லாமல் விசாரணை தொடங்கியதால் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது என்றும் மனுக்களில் கூறப்பட்டது.
மேலும், உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும், கணக்கு புத்தகங்கள், யு.பி.ஐ. பணப்பரிமாற்ற விவரங்கள், சிசிடிவி காட்சிகள், மின்னஞ்சல்கள், சர்வர் தரவு உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை மாநில அரசு உடனடியாக பாதுகாக்க இடைக்கால உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டது. அறக்கட்டளையின் நிதி நிர்வாகத்தை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் நிதி நிபுணர்கள் அடங்கிய தற்காலிக குழுவை அமைக்கவும், தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கைகளை இணையத்தில் வெளியிடவும் உத்தரவிட வேண்டும் என்றும் மனுக்கள் வலியுறுத்தின.
தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு (நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா) எஸ்.ஐ.டி. தனது தற்போதைய விசாரணை நிலை மற்றும் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் அடங்கிய முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. சி.பி.ஐ. விசாரணை கோரிய மனுவுக்கு மத்திய அரசு, உ.பி. அரசு மற்றும் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பதிலளிக்க நோட்டீஸ் வழங்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.





