தெலுங்கானா மாநிலத்தில், 6 வயது பேத்தி கார் ஓட்டும் போது எஸ்.ஐ. ஒருவர் முன்சீட்டில் அமர்ந்திருந்ததாகக் காட்டும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அவர்மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஹைதராபாத் நகர போலீசில் எஸ்.ஐ.யாக பணியாற்றும் பூஜாரி திரிபாதி என்பவரே சம்பவத்தில் தொடர்புடையவர். ஜூலை 11 மாலை, ஹைதராபாத் புறநகர் நர்சிங்கி பகுதியில் உள்ள பரபரப்பான கந்தம்குடா–பைராகிகுடா சாலையில் அவரது கார் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது சிறுமி மெதுவாக காரை இயக்கியதால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை கவனித்த மற்ற வாகன ஓட்டிகள் காரை வழிமறித்து கேள்வி எழுப்பினர்.
சிறுமியிடம் கேட்டபோது, “என் தாத்தா எஸ்.ஐ., அதனால் நான் ஓட்டுவேன்” என பதிலளித்ததாக தகவல். வாக்குவாதம் நீடித்த நிலையில், இது தானியங்கி கார் என்றும் முழுக் கட்டுப்பாடும் தன்னிடமே இருப்பதாகவும் எஸ்.ஐ. கூறி, பின்னர் டிரைவர் இருக்கைக்கு மாறியதாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, போலீசார் எஸ்.ஐ. மீது வழக்கு பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர்.





