தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, சுய கணக்கெடுப்பு பணிகள் 2026 ஜூலை 17 முதல் தொடங்குகின்றன. முதல்முறையாக டிஜிட்டல் முறையில் தகவல்களை பொதுமக்கள் நேரடியாக பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆன்லைன் பதிவு ஜூலை 31 வரை நடைபெறும்.

இந்த கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1 முதல் 30 வரை நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமான மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பிப்ரவரியில் நடத்தப்பட உள்ளது.

முதல் கட்டத்திற்கான சுய கணக்கெடுப்பில், பொதுமக்கள் https://se.census.gov.in/ என்ற இணையதளத்தில் மொபைல் போன் மூலம் விவரங்களை பதிவு செய்யலாம். ஒரு குடும்பத்திற்கு ஒரே ஒரு மொபைல் எண் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மொத்தம் 34 கேள்விகளுக்கு பதிலளித்த பிறகு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அடையாள எண் அனுப்பப்படும்; பின்னர் தங்கள் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட கணக்கெடுப்பாளர் வீட்டிற்கு வரும்போது அந்த எண்ணை தெரிவிக்க வேண்டும்.

பதிவு செய்ய குடும்பத் தலைவர்/தலைவி பெயரில், குடும்பத்தில் உள்ள யாரும் அவர்களின் சார்பாக விவரங்களை நிரப்பலாம்; ஆனால் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை வேறு குடும்பம் பயன்படுத்த முடியாது. இணையதளத்தில் மாநிலம்/யூனியன் பிரதேசம் தேர்வு செய்து கேப்சா உள்ளிட்டு, குடும்பத் தலைவர்/தலைவியின் பெயர் மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்து, விருப்ப மொழியை தேர்வு செய்து OTP மூலம் உறுதிப்படுத்த வேண்டும். அதன் பின்னர் மாவட்டம் உள்ளிட்ட இட விவரங்களை தேர்வு செய்து, மேப்பில் வீட்டின் இருப்பிடத்தை குறித்துச் சேமித்து கேள்வித்தாளை நிரப்பலாம். FAQ உள்ளிட்ட உதவி வசதிகளும் உள்ளன; விடுபட்ட தகவல்கள் இருந்தால் தளமே நினைவூட்டும், இறுதியாக சமர்ப்பிக்கும் முன் சரிபார்த்து திருத்தவும் முடியும்.