தமிழகத்தில் அதிக வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் வகை பரவி வருகிறது என்ற தகவல்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வதந்திகளை நம்பாமல் தேவையற்ற அச்சம், பதற்றம் கொள்ள வேண்டாம் எனவும் பொதுமக்களை கேட்டுக்கொண்டது.

அரசின் அறிக்கையில், ஆந்திராவைச் சேர்ந்த 52 வயது நபர் திருப்பதி தனியார் மருத்துவமனையிலிருந்து கடந்த ஜூன் 26 அன்று மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா தொற்றுடன் சேர்ந்து ‘கிளெப்சில்லா நிமோனியா’ என்ற பாக்டீரியா பாதிப்பும் இருந்ததாகவும், நீரிழிவு மற்றும் நீண்டகால சிறுநீரக நோய் போன்ற இணை பாதிப்புகளும் இருந்த நிலையில் ஜூன் 28 அன்று அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 68 வயது நபர் பெருங்குடல் புற்றுநோயால் ஏற்பட்ட சுவாச செயலிழப்பால் இறந்ததாகவும், அந்த நிகழ்வில் கொரோனா தற்செயலாக கண்டறியப்பட்டதாகவும் அரசு கூறியது. இதேபோல், ஆந்திரா கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 46 வயது நபர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாகவும், அந்த விவரம் ஆந்திரா சுகாதாரத்துறையால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தமிழகத்தில் இதுவரை 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தது. இவை அனைத்தும் வழக்கமான நோய் கண்காணிப்பின் போது கண்டறியப்பட்டவை; தொற்று பரவல் அதிகரித்ததால் ஏற்பட்டவை அல்ல என்றும் கூறப்பட்டது. பதிவான பெரும்பாலான நோயாளிகளுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்ததாகவும், நோயின் தீவிரம் அதிகரித்ததற்கோ வழக்கத்திற்கு மாறான மருத்துவ வெளிப்பாடுகளுக்கோ ஆதாரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

எனினும் முதியோர், கர்ப்பிணியர், நீண்டகால உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி அல்லது சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி ஆலோசனை பெற வேண்டும் என்றும், சுகாதாரத் துறைகள் நிலையை தொடர்ந்து கண்காணித்து தேவையான தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அரசு தெரிவித்தது.