டெஹ்ரான்: உலகின் முக்கிய கடல்வழி வணிக பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் மேலும் உயர்ந்துள்ளது. கடந்த வார தாக்குதல்களுக்குப் பிறகு, ஜலசந்தி தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக இரு நாடுகளும் தனித்தனியாக அறிவித்துள்ளன.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியின் நிர்வாகப் பொறுப்பை அமெரிக்கா எடுத்துக் கொண்டதாக கூறினார். அந்த வழியாக செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு வழங்கும் என்றும், அதற்காக கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஈரானுடன் இதுவரை பல முறை ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதாகவும், அவற்றை ஈரான் மீறியதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டினார். தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், இனிமேல் ஹார்முஸ் ஜலசந்தியின் “பாதுகாவலன்” அமெரிக்கா என அழைக்கப்படும் என்றும், பாதுகாப்பு செலவுகளை ஈடு செய்யும் வகையில் அந்த வழியாக கொண்டு செல்லப்படும் அனைத்து சரக்கு கப்பல்களுக்கும் 20 சதவீத கட்டணம் விதிக்கப்படும் என்றும் அறிவித்தார். நடைமுறைகள் உடனடியாக தொடங்கப்படும் என்றும், ஜலசந்தி திறந்தே இருக்கும் என்றும் அவர் கூறினார். அதே நேரத்தில், “ஈரானியத் தடையை” மீண்டும் அமல்படுத்துவதாகவும், அது ஈரானின் கப்பல்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மட்டுமே கட்டுப்படுத்தும்; மற்ற நாடுகள் தடையின்றி பயன்படுத்தலாம் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.