முன்னாள் தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ‘லுக்-அவுட்’ நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் மேற்கொள்ளப்படாத சாலைப் பணிகளுக்காக விதிகளை மீறி முன்கூட்டியே தொகை விடுவிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாகவும் கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டு, லஞ்ச ஒழிப்பு துறை (DVAC) விசாரித்து வருகிறது.
வேலு வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கும் நோக்கில் அவருக்கு எதிராக ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவில், சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய இடைக்கால தடை வழங்கியதுடன், நாளை (செவ்வாய்க்கிழமை) லஞ்ச ஒழிப்பு துறை முன் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு விசாரணைக்கு தடையாக அமையக்கூடும் எனக் கருதி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அவசர வழக்காக எடுத்துக்கொள்ளக் கோரியது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் முறையீடு செய்தனர்.
அவசர விசாரணை கோரிக்கையை தலைமை நீதிபதி ஏற்க மறுத்தாலும், நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து பரிசீலிப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர்களிடம் தெரிவித்தார்.





