பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் விநியோகிப்பதற்குப் பதிலாக, தானியங்கி விற்பனை இயந்திரங்கள் மூலம் ஆவின் பாலை விற்பனை செய்யும் திட்டத்தை ஊட்டி மற்றும் கொடைக்கானலில் சோதனை அடிப்படையில் செயல்படுத்த உள்ளதாக ஆவின் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவை கடுமையாக அமல்படுத்தக் கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி. பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு, பால் விநியோகத்தில் பிளாஸ்டிக் பாக்கெட்களுக்கு மாற்று வழியை கண்டறிய உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், ஆவின் பால் விநியோகத்திற்காக தானியங்கி விற்பனை இயந்திரங்களை மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளதாக ஆவின் கூறியுள்ளது. சோதனை முயற்சியாக, ஊட்டி மற்றும் கொடைக்கானல் நகரங்களில் மக்கள் நெருக்கம் அதிகமான பகுதிகளில் இந்த இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதற்காக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடமிருந்து இரண்டு இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளதாகவும், நிறுவுவதற்கான தேவையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயந்திரங்கள் அமைக்கப்பட்ட பின், அருகிலுள்ள வீடுகள் மற்றும் ஓட்டல்களுக்கு பாக்கெட்டுகளில் பால் விநியோகிக்க வேண்டாம் என மொத்த விற்பனையாளர்கள், ஏஜெண்டுகள், வியாபாரிகளுக்கு அறிவுறுத்தி, அந்த பகுதிகளில் பாக்கெட் விற்பனை நிறுத்தப்படும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.