இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் டாக்டர் அனில் மேனன் (49) தனது முதல் விண்வெளிப் பயணத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) பாதுகாப்பாக சென்றடைந்துள்ளார்.
விண்வெளி நிலையத்தில் நடைபெறும் குழு மாற்றுச் சுழற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் ஏவுதளத்திலிருந்து ரஷ்யாவின் சோயுஸ் எம்.எஸ்.-29 விண்கலம் மூலம் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. அனில் மேனனுடன் ரஷ்ய விண்வெளி வீரர்கள் பியோத்தர் துப்ரோவ் மற்றும் அன்னா கிகினா ஆகியோரும் பயணித்தனர்.
நாசா தெரிவித்ததன்படி, அனில் மேனன் சுமார் 8 மாதங்கள் விண்வெளி நிலையத்தில் தங்கி பல்வேறு தொழில்நுட்ப மற்றும் மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளார். நீண்டகால விண்வெளிப் பயணம் மனித உடலின் ரத்த ஓட்டம் மற்றும் நரம்புகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் குறித்து, தனது உடலையே ஆய்வு அடிப்படையாக கொண்டு அவர் ஆராய்ச்சி செய்ய உள்ளார்.
மேலும், நீண்ட தூர விண்வெளிப் பயணங்களில் பூமியின் உதவியின்றி விண்வெளி வீரர்களே தேவையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் ஆய்வு செய்ய உள்ளார். இதோடு, செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட மருத்துவ கருவிகளுக்குத் தேவையான செமிகண்டக்டர்களை புவிஈர்ப்பு இல்லாத சூழலில் உற்பத்தி செய்வதற்கான ஆய்வுகளிலும் அவர் பங்கேற்க உள்ளதாக நாசா கூறியுள்ளது.
இந்தப் பணிகள், விண்வெளியில் மனித உடல்நல மாற்றங்களைப் புரிந்து கொள்ளவும், எதிர்கால நீண்டகால விண்வெளிப் பயணங்களுக்கு தேவையான தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும் உதவும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.





