புதுடில்லி: தேசிய கல்விக் கொள்கை வழிகாட்டுதலின்படி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் மூன்றாவது மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது. இந்த நடைமுறை 2027-28 கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும்.
நேற்று வெளியிட்ட அறிக்கையில், மும்மொழிக் கொள்கையின் கீழ் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு இந்திய மொழிகளையும், ஒரு அன்னிய மொழியையும் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என சி.பி.எஸ்.இ. தெரிவித்தது.
மூன்றாவது மொழிப் பாடத் தேர்வு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் இடம்பெறாது என்றும், ஆனால் அந்தப் பாடத்தில் பள்ளி நடத்தும் அகமதிப்பீட்டில் மாணவர் தேர்ச்சி பெற்றால்தான் 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும் என்றும் வாரியம் விளக்கமளித்தது.
2026-27 கல்வியாண்டில் ஏற்கனவே 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த விதி பொருந்தாது; 2026-27ல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கே இது பொருந்தும் என கூறப்பட்டது. 10ம் வகுப்பில் அகமதிப்பீட்டில் மாணவர் தேர்ச்சி பெறாவிட்டால், பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன் பள்ளிகள் மறுமதிப்பீடு நடத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 9ம் வகுப்பில் மூன்றாம் மொழி அகமதிப்பீட்டில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் 10ம் வகுப்புக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். ஆனால் 10ம் வகுப்பில் படிக்கும் போதே, 9ம் வகுப்பில் தோல்வியடைந்த மூன்றாம் மொழி அகமதிப்பீட்டை மீண்டும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





