நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கு விசாரணை தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தொகுதி எம்எல்ஏவுமான எ.வ.வேலு ஜூலை 15 அன்று சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அலுவலகத்தில் ஆஜரானார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கரூரில் சாலை போடாமல் பணிகள் நடந்ததாகக் காட்டி ரூ.3.23 கோடி மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் ஒன்பது பேரும் இடம்பெற்றுள்ளனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக, கடந்த ஜூன் 25 அன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வேலுவின் வீடு உள்ளிட்ட 20 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து விளக்கம் அளிக்க ஜூலை 3 அன்று நேரில் ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அன்றைய தினம் அவர் ஆஜராகவில்லை; சிங்கப்பூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது வக்கீல்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஜூலை 15 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி இன்று அவர் விசாரணைக்கு ஆஜரானார்.





