ஐதராபாத்: வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், ஐதராபாத் மெட்ரோபொலிட்டன் வளர்ச்சி ஆணையம் (HMDA) தலைமை பொறியாளர் ரவீந்திரனை தெலுங்கானா லஞ்ச ஒழிப்புப் பிரிவு (ACB) போலீசார் கைது செய்துள்ளனர்.

அதிகாரிகள் தெரிவித்ததாவது: குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் ரவீந்திரனுக்கு தொடர்புடைய இடங்களிலும், உறவினர்கள் மற்றும் பினாமிகள் தொடர்புடையதாகக் கூறப்படும் இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் அசையும் மற்றும் அசையா சொத்துகளுக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் சொத்து மதிப்பு ரூ.9.24 கோடி என குறிப்பிடப்பட்டிருந்தாலும், தற்போதைய சந்தை மதிப்பில் அது சுமார் ரூ.100 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது பெயரில் 5 இடங்களில் பிளாட்கள், 4 அடுக்குமாடி குடியிருப்புகள், விவசாய நிலம், 3,000 சதுர அடி வில்லா மற்றும் வணிக வளாகம் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ரூ.3.82 லட்சம் ரொக்கம், ரூ.45 லட்சம் வங்கி டெபாசிட், 1.44 கிலோ தங்க நகைகள் (ரூ.36.7 லட்சம்), 12.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் (ரூ.10 லட்சம்), ரூ.17.24 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள், ரூ.9.32 லட்சம் மதிப்புள்ள மின்னணுப் பொருட்கள், ரூ.1.16 கோடி மதிப்புள்ள 4 சொகுசு கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இன்னும் வேறு இடங்களில் சொத்து வைத்துள்ளாரா என விசாரணை தொடர்கிறது.

கைது செய்யப்பட்ட ரவீந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய ACB போலீசார், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.