புதுடில்லி: 20% எத்தனால் கலந்த இ20 பெட்ரோலை பயன்படுத்துவதால் வாகனங்களுக்கு சேதம் ஏற்படாது என்று ஐஐடி கான்பூர் விஞ்ஞானிகள் மேற்கொண்ட சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை குறைப்பது போன்ற நோக்கங்களுடன் நாடு முழுவதும் இ20 எரிபொருளை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதற்கிடையில், இ20 செயல்திறன் குறித்து சமூக வலைதளங்களில் சரிபார்க்கப்படாத புகார்கள் பரவின.

இயந்திர பொறியியல் துறையின் இன்ஜின் ஆராய்ச்சி ஆய்வகத்தில் விஞ்ஞானி துருவ் ராஜ் கரானா தலைமையிலான குழு நடத்திய ஆய்வுகளில், இ20 பயன்படுத்தும் போது எரிபொருள் திறன் குறைவு 5%க்கும் குறைவாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டும் முறை, சாலை நிலை, டயர் காற்றழுத்தம், போக்குவரத்து நெரிசல், பராமரிப்பு போன்ற காரணங்களாலும் மைலேஜ் மாறக்கூடும்; எரிபொருள் மட்டுமே காரணம் என்று கூற முடியாது என்றும் குழு விளக்குகிறது.

பல கட்டமாக மேற்கொள்ளப்பட்ட விரிவான சோதனைகளில் இ20 எரிபொருள் இன்ஜினுக்கு சேதம் அல்லது அதிக தேய்மானம் ஏற்படுத்தாது என்று கண்டறிந்ததாக கரானா கூறினார். சமூக வலைதளங்களில் பரவும் பாதிப்பு குறித்த கூற்றுகள் அறிவியல் ஆதாரமற்றவை என்றும், வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை ஓட்டிகள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பேராசிரியர் அவினாஷ்குமார் அகர்வால் தலைமையிலான குழு எத்தனால் கலந்த எரிபொருட்கள் குறித்து தொடர்ந்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், 85% எத்தனால் கொண்ட எரிபொருளையும் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாகவும் ஐஐடி கான்பூர் தெரிவித்துள்ளது. இ20 பயன்படுத்துவதால் செயல்திறனில் சரிவு இல்லை என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.