இந்தியா–பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 15 முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கிடையேயான ஏற்றுமதி–இறக்குமதி பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் விவசாயிகள், மீனவர்கள், சிறு–குறு தொழில் துறையினர் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி குறைப்பு காரணமாக பிரிட்டன் சந்தையில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அணுகல் மேம்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஒப்பந்தம் அமலுக்கு முன் சில பொருட்களுக்கு உயர்ந்த வரி இருந்தது. பதப்படுத்திய உணவுப் பொருட்களுக்கு 70% வரை, கடல்சார் பொருட்கள் மற்றும் பழங்களுக்கு 20% வரை, தோல் மற்றும் காலணி பொருட்களுக்கு 16% வரை, எலக்ட்ரிக்கல் மிஷினரிக்கு 14% வரை, ஜவுளிக்கு 12% வரை வரி இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் டீ, காபி, மரம்–காகிதம், அலுமினியம் ஆகியவற்றுக்கு 10% வரை; கெமிக்கல், கனிமங்கள், இயந்திரங்கள், நறுமணப்பொருட்கள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றுக்கு 8% வரை; பிளாஸ்டிக்–ரப்பர் மற்றும் சர்ஜிக்கல் கருவிகளுக்கு 6% வரை; ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி, பர்னிச்சர் மற்றும் விளையாட்டுப் பொருட்களுக்கு 4% வரை வரி இருந்தது.
தற்போது ஒப்பந்தம் அமலுக்கு வந்ததையடுத்து, மேற்கண்ட பட்டியலில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் ஏற்றுமதி வரி பூஜ்யமாக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதனால் பிரிட்டனில் இந்திய தொழில் துறைக்கான வர்த்தக வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





