கடந்த ஆண்டு இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் 2025 ஜூலை 25 அன்று கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் கீழ் பல்வேறு பொருட்களுக்கான சுங்க வரியை படிப்படியாக குறைக்க அல்லது நீக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

இதனால் இந்தியாவில் இருந்து ஜவுளி, தோல் பொருட்கள், மருந்துகள், நகைகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதிக்கு கூடுதல் வாய்ப்புகள் உருவாகும் என அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் புதிய முதலீடுகள் வருவதற்கும், வேலைவாய்ப்புகள் உருவாவதற்கும், தொழில் வளர்ச்சிக்கு ஊக்கம் கிடைப்பதற்கும் இந்த ஒப்பந்தம் உதவும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.