தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நாயகனாக நடித்த ‘ஜனநாயகன்’ படம் ஜூலை 23ல் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்திற்கான முன்பதிவு ஜூலை 19ல் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் முதலில் ஜனவரி 9ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தணிக்கைச் சான்றிதழ் தாமதம் காரணமாக வெளியீடு பின்னடைந்தது; இதையடுத்து தயாரிப்பு தரப்பு நீதிமன்றத்தையும் அணுகியதாக கூறப்படுகிறது.

தேர்தலுக்கு முன்பாக சான்றிதழ் பெற்று வெளியிட முயன்றாலும், தணிக்கை வாரியம் அப்போது சான்றிதழ் வழங்கவில்லை. தேர்தல் முடிந்து விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னரும் சான்றிதழ் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நீடித்த நிலையில், ஜூலை 9ல் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தணிக்கை வாரியம் படத்தின் நீளம் 183 நிமிடங்கள் (3 மணி 3 நிமிடங்கள்) எனவும் குறிப்பிட்டுள்ளது. வெளியீட்டு அறிவிப்புடன் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், படம் “நெருப்பால் சோதிக்கப்பட்டது, காலத்தால் செதுக்கப்பட்டது” என தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அறிவித்ததிலிருந்து 6 மாதங்களுக்கு பிறகு படம் வெளியாக இருப்பதும், டைட்டில் கார்டில் ‘தளபதி விஜய்’ என்பதற்கு பதிலாக ‘மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்’ என குறிப்பிடப்பட உள்ளதாக கூறப்படுவதும் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.