திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட திட்டத் தகவல்களை கொண்ட ஆயிரக்கணக்கான ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

“வோர்ல்ட் லீக்ஸ்” என தங்களை அழைக்கும் ஹேக்கர்கள், அணுமின் நிலையம் தொடர்பான சுமார் 19,000 ஆவணங்களை டார்க் வெப்பில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4-ஆம் அலகுகளின் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் குழுமத்திடமிருந்து திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 8,58,000 ஆவணங்களில் இருந்து முக்கியமான 19,000 ஆவணங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மூன்றாம் தரப்பு நிறுவனம் நிர்வகிக்கும் சர்வரிலிருந்து சில தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் தெரிவித்ததுடன், இது குறித்து அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. ஆனால் எந்த வகை தகவல்கள் கசிந்தன என்பதை நிறுவனம் தெரிவிக்கவில்லை.

டார்க் வெப்பில் கசிந்த ஆவணங்கள் 2016 முதல் 2025 மே மாதம் வரை சேமிக்கப்பட்டவை என கூறப்படுகிறது. வென்டிலேசன், குளிரூட்டும் அமைப்பு விவரங்கள், பொது கட்டுப்பாட்டு அறை லே-அவுட்கள், கருவிகள் பரிசோதனை விவரங்கள், சப்ளையர் பட்டியல், இன்சூரன்ஸ் பாலிசிகள் போன்றவை இதில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2027-ல் செயல்பாட்டுக்கு வர உள்ள 3 மற்றும் 4-ஆம் அலகுகளுக்கான கட்டுமானம் தற்போது நடைபெற்று வருவதாகவும், ரஷ்ய அரசின் ரோசாட்டம் வழங்கிய அணு உலைகளின் மைய வடிவமைப்புகள் கசிந்த தகவல்களில் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அணுசக்தி மின்சார வாரியத்துடன் இணைந்து இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (CERT-In) விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கிறது.