சென்னை: லால்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ், தலைமைச் செயலகத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து பேசியது, அதிமுக வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலுக்குப் பிறகு, திமுக கூட்டணியில் வென்ற கட்சிகளின் ஆதரவுடன் அரசு அமைந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கட்சி உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்த சில அதிமுக எம்எல்ஏக்கள் பின்னர் பதவியை ராஜினாமா செய்து ஆளும் கட்சியில் இணைந்தனர்.
இதுவரை மூன்று முன்னாள் அமைச்சர்கள் உட்பட ஆறு அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து கட்சி மாற்றம் செய்துள்ளனர். மேலும், முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியையும் சேர்த்து, ஏழு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது.
இந்த கட்சி மாற்றங்களை ‘குதிரை பேரம்’ என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சிகளை கடுமையாக தாக்கி வருகிறார். இதே நேரத்தில், சட்டசபையில் பலத்தை அதிகரிக்க 13 தொகுதிகள் வரை இடைத்தேர்தலுக்கு ஆளும் தரப்பு வியூகம் வகுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பின்னணியில், லீமா ரோஸ் தலைமைச் செயலகம் வந்து அமைச்சர் செங்கோட்டையன் அறைக்கு சென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 10 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததாக கூறப்படும் நிலையில், சந்திப்பின் காரணம் குறித்து இரு தரப்பும் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர். தேர்தலுக்கு முன் அதிமுகவிலிருந்து விலகி ஆளும் கட்சியில் இணைந்து அமைச்சரான செங்கோட்டையனை, அதிமுக பெண் எம்எல்ஏ திடீரென சந்தித்தது கட்சிக்குள் சலசலப்பை அதிகரித்துள்ளது.





