பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுடன் தொடர்புடைய தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.35 ஏக்கர் நிலத்தின் பத்திரப்பதிவை மதுரை உயர்நீதிமன்ற அமர்வு ரத்து செய்துள்ளது.
முன்னதாக, அந்த நிலத்தின் விற்பனைப் பத்திரத்தை சார்பதிவாளர் பதிவு செய்ய மறுத்ததாகக் கூறி சிலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த தனி நீதிபதி, சார்பதிவாளர் மறுத்த உத்தரவை ரத்து செய்து விற்பனைப் பதிவை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
அந்த உத்தரவைத் தொடர்ந்து, ரூ.100 கோடி மதிப்புடையதாக கூறப்படும் நிலம் 2026 ஜூலை 6 அன்று இரண்டு தனிநபர்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டு, பெரும் பரபரப்பு உருவானது.
பத்திரப்பதிவை மேற்கொண்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை தமிழக அரசு பணியிடைநீக்கம் செய்தது. மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கோவில் நிர்வாகம் போலீசில் புகார் அளித்ததையடுத்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து மடத்தின் தக்கராக உள்ள கோவிலின் செயல் அலுவலர் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு மேல்முறையீட்டை ஏற்று, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து, மேற்கொண்ட பத்திரப்பதிவு செல்லாது என உத்தரவிட்டது.





