2022ல் உக்ரைன் மீது ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்தும் நிலை உருவானபோது, அதிபர் விளாதிமிர் புடினிடம் நேரடியாக பேசி அதைத் தடுத்து நிறுத்தியவர் பிரதமர் நரேந்திர மோடி என போலந்து நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் டியோபில் பர்தோஸூவ்ஸ்கி கூறியுள்ளார்.

டில்லியில் நடைபெற்ற இந்தியா–போலந்து கூட்டு பொருளாதார ஆணையக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நிருபர்களிடம் பேசிய அவர், மோடி உலகளவில் பிரபலமும் மதிப்பும் பெற்ற தலைவரென குறிப்பிட்டார். இந்தியாவுக்கு ரஷ்யாவுடன் நீண்டகால உறவு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மோடி கூறுவதை புடின் உண்மையாகவே கவனத்தில் கொள்கிறார் என்றும், ரஷ்யா–உக்ரைன் போரின் நெருக்கடியான தருணத்தில் அந்த செல்வாக்கை மோடி ஏற்கனவே நிரூபித்துள்ளார் என்றும் பர்தோஸூவ்ஸ்கி தெரிவித்தார்.

அந்த நெருக்கடி காலத்தில், 2022ல் உக்ரைன் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தும் முயற்சியை புடினிடம் பேசி பிரதமர் மோடி தடுத்து நிறுத்தினார் என அவர் கூறினார்.