தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் துறை ரீதியான முடிவுகளை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், மாவட்டம் தோறும் ‘வருவாய் அரசு டிவி சேனல்’களை உருவாக்க வேண்டும் என கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

தமிழகத்தைச் சேர்ந்த விஜயபாண்டியன் தாக்கல் செய்த மனுவில், பல்வேறு துறைகளில் என்ன நடக்கிறது என்ற தகவல்கள் மக்களுக்கு முழுமையாக சென்று சேரவில்லை என்பதால், ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு நிர்வகிக்கும் தனி டிவி சேனல்கள் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள அரசை அணுகலாமே என தலைமை நீதிபதி மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு நீதிபதிகள், தமிழக மக்கள் தெளிவானவர்களும் நன்றாக படித்தவர்களும்; சமூக வலைதளங்களின் தாக்கமும் அதிகம் இருப்பதால், தகவல்களை அறிய தொலைக்காட்சி மட்டுமே அவசியமில்லை என்றும் குறிப்பிட்டனர். மேலும், தமிழகத்தில் நிர்வாகம் பல நிலைகளிலும் சிறப்பாக செயல்படுகிறது என்றும் தெரிவித்தனர்.

இது அரசின் கொள்கை சார்ந்த முடிவு என்பதால் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர். அதே நேரத்தில், இந்த கோரிக்கையை உரிய அரசு துறையிடம் முன்வைக்க மனுதாரருக்கு அறிவுறுத்தப்பட்டது.