சென்னை: மாநிலம் முழுதும் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, தமிழகத்தில் நெல் சாகுபடி பரப்பு கடந்தாண்டின் இதே காலகட்டத்தை விட சுமார் ஒரு லட்சம் ஏக்கர் வரை குறைந்துள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக ஜூன் மாதத்தில் குறுவை பருவ நெல் சாகுபடி தொடங்கப்படும். இந்த பருவத்தில் கிடைக்கும் நெல், அரசின் ரேஷன் உணவு தானிய திட்டத்திற்காக கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் பாசனத்திற்கான நீர் திறக்கப்படவில்லை. மேலும் மாநிலத்தின் பல பகுதிகளில் நீர்நிலைகள் வறண்டு காணப்படுவதுடன், தென்மேற்கு பருவமழையும் இயல்பான அளவில் பெய்யாததால் பாசனத் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்குகளின்படி, டெல்டா மாவட்டங்களில் கடந்தாண்டு 4.04 லட்சம் ஏக்கரில் நடந்த குறுவை சாகுபடி, இந்த ஆண்டு 3.47 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது. டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் சாகுபடி பரப்பு 4.48 லட்சம் ஏக்கரிலிருந்து 4.02 லட்சம் ஏக்கராக சரிந்துள்ளது.

மொத்தமாக கடந்தாண்டு 8.53 லட்சம் ஏக்கரில் நடந்த நெல் சாகுபடி, தற்போது 7.50 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது. இதனால் கடந்தாண்டை விட இந்த ஆண்டு சுமார் ஒரு லட்சம் ஏக்கர் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், இது வேளாண் துறையில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.