தமிழக அரசின் தலைமைச் செயலர் சாய்குமாரின் பணிக்காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அவரது பணிக்காலம் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது.
சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காலத்தில் தலைமைச் செயலராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டதையடுத்து, கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி சாய்குமார் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். விஜய் தலைமையில் தவெக அரசு அமைந்த பிறகு பல மூத்த ஐஏஎஸ் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாற்றப்பட்டாலும், தலைமைச் செயலர் பதவியில் மாற்றம் செய்யப்படவில்லை.
சாய்குமாரின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது 6 மாத பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1990 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சாய்குமார், மதுரை, விருதுநகர், தர்மபுரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார். மேலும் தமிழக மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத் தலைவர், நகராட்சி நிர்வாக ஆணையர், பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார்.





