சென்னை: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அல்லது பெறும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எளிதாக புகார் அளிக்க, தமிழக அரசு தனிப்பட்ட வாட்ஸ்அப் புகார் எண்ணை அறிமுகம் செய்துள்ளது.

அனைத்து துறைகளுக்கும் தலைமைச் செயலாளர் சாய் குமார் அனுப்பிய சுற்றறிக்கையில், 94981 80936 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி வழியாகவும், 044-22321090, 044-22321085, 044-22310989, 044-22342142 என்ற தொலைபேசி எண்களிலும் புகார் அளிக்கலாம்.

இந்த புகார் தொடர்பு விவரங்கள் அனைத்து அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் இணையதளங்களில் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என சுற்றறிக்கை அறிவுறுத்துகிறது.

மேலும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் கேட்டால் எங்கு, எப்படி புகார் தெரிவிப்பது என்பதற்கான தகவல்கள் பிரதான இடங்களில் தெளிவாக காட்சிப்படுத்தப்பட வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) தொடர்பு விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் துறைச் செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்; ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள இன்ஸ்பெக்ஷன் செல் அதிகாரிகள் ஆய்வு செய்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.