சென்னை தலைமைச் செயலகத்தில் TVK ஆதரவாளர்கள் அதிக அளவில் திரளுவதால், நாளுக்கு நாள் கூட்ட நெரிசல் அதிகரித்து, அமைச்சர்கள் அறைகள் அருகே தள்ளுமுள்ளு சம்பவங்கள் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மே 10-ம் தேதி TVK அரசு பொறுப்பேற்ற நிலையில், அடுத்தாண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் போட்டியிட விருப்பம் காட்டும் நிர்வாகிகள் இப்போதே செயல்படத் தொடங்கியுள்ளனர். மாவட்டங்களில் இருந்து பொதுமக்களை பஸ், ரயில், கார்களில் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வந்து, முதல்வர் தனிப்பிரிவு மற்றும் அமைச்சர்களிடம் மனு அளித்தால் கோரிக்கைகள் நிறைவேறும் என கூறப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மனுக்கள் அளிப்பதோடு மட்டுமல்லாமல், அமைச்சர்களை நேரில் சந்தித்து காரியங்கள் சாதிக்கவும், கட்சி பதவிகள் பெறவும் ஆதரவாளர்களுடன் வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தலைமைச் செயலக வளாகத்தில் கூட்டம் தொடர்ந்து பெருகுகிறது.
வாகன நிறுத்தத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். தலைமைச் செயலக ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாகனங்களுக்கு எதிரே உள்ள வாகன நிறுத்தம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வருகையாளர்கள் கார்களை முறையாக நிறுத்தாமல் அவசரமாக ஆங்காங்கே நிறுத்திச் செல்லுவதால், பணிக்காக வரும் அதிகாரிகள் தங்கள் வாகனங்களை மீண்டும் எடுக்க முடியாத நிலை உருவாகிறது.
அமைச்சர்களை சந்திக்க காலை 10 மணி முதல் மாலை 5 மணியை கடந்தும் கூட்டம் அலைமோதுவதால் அறைகள் அருகே தள்ளுமுள்ளு ஏற்படுவதாகவும் கூறப்பட்டது. இதற்கு மாற்றாக, மாவட்டங்களில் அமைச்சர்கள் தலைமையில் முகாம்கள் நடத்தி மனுக்களை பெறலாம்; மேலும் முதல்வர் தனிப்பிரிவிற்கு புகார் அளிக்க எம்.எல்.ஏ. அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்களை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்த அனுமதி வழங்கலாம் என தலைமைச் செயலக அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.





