புதுடில்லி: மத்திய அரசின் முக்கிய சேவைகளை ஒருங்கிணைக்கும் உமாங் இணையதளம் மற்றும் செயலியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் கோடிக்கணக்கான பயனர்களின் ஆதார் எண்கள், பி.எப். (வருங்கால வைப்பு நிதி) கணக்கு விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் கசியும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களான அக்ஷய் மற்றும் வைரல் வகேலா, உமாங் மூலம் வழங்கப்படும் பல சேவைகளில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்தனர். 2,400க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை ஒரே தளத்தில் வழங்கும் இந்த செயலியில், ஆதார் எண்கள் போதுமான பாதுகாப்பு இன்றி வெளிப்படையாகத் தெரியும் வகையில் சேமிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்த குறைபாடுகளை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் பயனர்களின் பி.எப். கணக்கு விவரங்களை மாற்றி அமைத்து, கணக்கிலுள்ள பணத்தை சட்டவிரோதமாக திருட வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்தனர். மேலும் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு விவரங்களும் பாதுகாப்பு இன்றி சேமிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.
இந்த விவகாரம் குறித்து தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT-In) ஆகியவற்றுக்கு தகவல் அளிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பி.எப். அமைப்பு தன் இணைய சேவையை தற்காலிகமாக நிறுத்தி, “தரவு மாற்றம்” பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட விளக்கத்தில், குறைபாடுகள் ஆய்வு செய்யப்பட்டு திருத்தம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட தரவுகள் தற்போது குறியாக்கம் (என்கிரிப்ஷன்) செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. ஆனால் பயன்படுத்தப்பட்ட குறியாக்க முறை போதுமான பாதுகாப்பை வழங்கவில்லை; அதை எளிதில் உடைக்க முடியும் என ஆய்வாளர்கள் மீண்டும் கூறிய நிலையில், அரசு முக்கிய இணையதளங்களில் பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிய “வார் ரூம்” அமைத்து, மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகள் மூலம் ஆய்வு நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.





