மத்திய பிரதேசத்தின் குவாலியரைச் சேர்ந்த 70 வயது ஆடிட்டர் ஒருவர், வாட்ஸ்அப்பில் வந்த தகவலை நம்பி போலி கிரிப்டோகரன்சி மற்றும் ஆன்லைன் வர்த்தக முதலீட்டில் ஈடுபட்டு ரூ.21.06 கோடியை இழந்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் அசோக் விஜயவர்க்கியா. இவர் மாநில வர்த்தக மற்றும் தொழில் துறை சபையின் தலைவராகவும் உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில், “திவ்யா” எனத் தன்னை முதலீட்டு ஆலோசகராக அறிமுகப்படுத்திய ஒருவர் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு, குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை நம்பிய விஜயவர்க்கியா, அனுப்பப்பட்ட லிங்க் மூலம் ஒரு கணக்கைத் தொடங்கி சிறு தொகைகளில் முதலீடு செய்தார். நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ரூ.1.88 லட்சம் லாபம் கிடைத்ததாக அவரது கணக்கில் வரவு காட்டப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த போலி தளத்தில், முதலீடுகளுக்கு ரூ.33 கோடிக்கு மேல் லாபம் வந்ததாக திரையில் காட்டப்பட்டதால், அவர் சொந்த பணத்துடன் உறவினர்கள், நண்பர்களிடமிருந்தும் பணம் பெற்று முதலீடு செய்துள்ளார்.

ஏழு மாதங்களில், நான்கு வங்கிக் கணக்குகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.21.06 கோடியை மோசடி கும்பல் குறிப்பிட்ட கணக்குகளுக்கு அனுப்பியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் முதலீட்டுத் தொகையும் லாபமும் சேர்த்து திரும்பப் பெற முயன்றபோது, மழுப்பலான பதில்களுடன் பணத்தை வழங்க மறுத்ததாகவும், பணத்தை விடுவிக்க வரி, கமிஷன், செயலாக்கக் கட்டணம் என்ற பெயரில் கூடுதலாக ரூ.10.34 கோடி செலுத்த வேண்டும் என வற்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இதுவரை ரூ.2 கோடியை மட்டுமே முடக்க முடிந்ததாகவும், மீதமுள்ள தொகை பல்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.