பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிப்பதில் தமிழக அரசுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2024 ஜூலை 5 அன்று சென்னையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரித்து வந்த நிலையில், அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, அரசியல் தலையீடு காரணமாக விசாரணை நேர்மையாக நடைபெறாது எனக் கூறி சிபிஐக்கு மாற்றக் கோரினார்.

அந்த மனுவை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு ஒப்படைக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து அப்போது இருந்த திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, சிபிஐ விசாரணைக்கு தடை கோரியிருந்தது.

பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பொறுப்பேற்றது. இந்நிலையில், முன்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டை திரும்பப் பெறுவதாகவும், சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு இல்லை என்றும் கூறி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. ஜூலை 22 அன்று தடை மனு விசாரணைக்கு வர உள்ள நிலையில், இந்த நிலைப்பாடு சிபிஐ விசாரணை தொடர்வதற்கான தடையை நீக்கும் வகையில் உள்ளது.