மத்திய தொல்லியல் துறை (ASI)யில் பதவி உயர்வும் புதிய நியமனங்களும் பல்வேறு நீதிமன்ற வழக்குகளால் முடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் காலிப்பணியிடங்களை நிரப்பவும், உதவி தொல்லியல் கண்காணிப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
‘குரூப் ஏ’ அந்தஸ்தில் பணியாற்றும் உதவி தொல்லியல் கண்காணிப்பாளர்கள் களப்பணியும் நிர்வாகமும் இணையும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள். ஒவ்வொரு தொல்லியல் வட்டத்திலும் அகழாய்வுகளை நடத்துதல், நினைவுச் சின்னங்களை பராமரித்தல், பழமையான கோவில்கள், கோட்டைகள், கல்வெட்டுகளை நேரில் ஆய்வு செய்து சிதையாமல் பாதுகாத்தல் போன்ற பணிகளை அவர்கள் மேற்கொள்கிறார்கள்.
விதிமுறைகளின்படி, ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள உதவி தொல்லியல் கண்காணிப்பாளர்கள் யு.பி.எஸ்.சி. தேர்வின் மூலம் துணை தொல்லியல் கண்காணிப்பாளர் பதவிக்கு உயர்வு பெறலாம். காலிப்பணியிடங்களில் மூன்றில் ஒரு பங்கு பணியில் உள்ளவர்களுக்கு ஒதுக்கப்பட்டு, மீதியவை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்பப்படுகின்றன.
இந்த நிலையில், 2024ல் 67 துணை தொல்லியல் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டபோது, உதவி தொல்லியல் கண்காணிப்பாளர்கள் யாரும் தேர்வாகவில்லை; அவர்கள் அனைவரும் உச்ச வயது வரம்பை கடந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, அதன் காரணமாக யு.பி.எஸ்.சி. தேர்வு நடைமுறையும் பதவி உயர்வுகளும் நிறுத்தப்பட்டன.
மேலும் துறையின் பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 2,646 பணியிடங்களையும் நிரப்ப முடியாமல் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்புடைய வழக்குகள் இந்த வாரத்துக்குள் முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்பதாகவும், தீர்ப்பு வந்ததும் காலியிடங்கள் நிரப்பப்படும் எனவும் அவர்கள் கூறினர்.




