இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலூசிஸ்தான் தங்களை தனி நாடாக தன்னிச்சையாக அறிவித்ததாக சமூக வலைதளங்களில் பரவும் ஒரு கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘பலூசிஸ்தான் குடியரசு’ என்ற பெயரில் வெளியிடப்பட்ட அந்தக் கடிதத்தில், பலூச் விடுதலை இயக்கம் பாகிஸ்தானிலிருந்து சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும், தற்போது தனி நாடாக செயல்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தங்களுக்கென தேசிய கொடி, தேசிய கீதம் மற்றும் ‘பலோச்சி பாலுஸ்’ என்ற புதிய நாணயத்தையும் அறிமுகப்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே கடிதத்தில், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையில் இருந்த பலோச் மற்றும் பஷ்தூன் இனத்தைச் சேர்ந்தவர்கள் பதவிகளைத் துறந்து தங்களுடன் இணைந்ததாகவும், இந்தாண்டு இறுதிக்குள் பாகிஸ்தானை முழுமையாக வெளியேற்ற 5 லட்சம் வீரர்கள் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஐ.நா., இந்தியா உள்ளிட்ட நாடுகள் பலூசிஸ்தான் சுதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும், புதுடில்லியில் துாதரகம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இருப்பினும், நீண்டகால போராட்டப் பின்னணியின்போதும் சட்டரீதியாக பலூசிஸ்தான் இன்னும் புதிய நாடாக உருவாகவில்லை; இதுவரை எந்த உலக நாடும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





