கோவையில் நடைபெறும் செம்மொழி பூங்கா திட்டப்பணிகளில் ரூ.40 கோடி வரை முறைகேடுகள் நடந்துள்ளதாக ஒப்பந்ததாரர்கள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருக்கு அந்த சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில், திட்டத்திற்கு முதலில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டதாகவும், பின்னர் “கூடுதல் மதிப்பீடு” என்ற பெயரில் மாநகராட்சி நிதியிலிருந்து ரூ.40 கோடிக்கு மேல் கூடுதலாக சேர்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், திட்டப்பட்டியலில் இல்லாத பல பொருட்களை பயன்படுத்தியதாகவும், இதனால் ரூ.45 கோடியாக இருந்த செலவு ரூ.80 கோடி அளவுக்கு உயர்ந்ததாகவும் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. பொதுப்பணி துறை, தனியார் வல்லுநர்கள் மற்றும் தணிக்கை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்தால் போலி பில் உள்ளிட்ட முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் கடந்த 5 ஆண்டுக்குள் போடப்பட்ட சாலைகளையே தேர்வு செய்து மீண்டும் போடுவது போல காட்டி, சுமார் 50% பணியே செய்து 100%க்கும் மேல் பில் போட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் நடந்த பணிகளை மறு ஆய்வு செய்து அளவீடு, தரம் ஆகியவற்றை சரிபார்த்து, தவறு உள்ள பணிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.