தமிழகத்தில் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் அமைச்சரவையில் இடம் பெறுவது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் (இந்திய கம்யூ.) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (மா.கம்யூ.) கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு வெளிப்பட்டுள்ளது.

த.வெ.க. அரசுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளில் காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக் ஆகியவை அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிலையில், இந்திய கம்யூ. மற்றும் மா.கம்யூ. இரண்டும் அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருகின்றன.

வரும் உள்ளாட்சி தேர்தலில் த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட இந்திய கம்யூ. மாநில செயலர் வீரபாண்டியன் விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், கட்சிக்குள் சில நிர்வாகிகள் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

த.வெ.க. ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என இந்திய கம்யூ. எம்.எல்.ஏ.க்கள் தளி ராமச்சந்திரன் மற்றும் நாகப்பட்டினம் மாரிமுத்து விரும்புவதாகவும், அமைச்சரவையில் இந்திய கம்யூ. இடம் பெறுவதற்கு வீரபாண்டியன் ஆதரவு காட்டியுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர், அமைச்சரவையில் இந்திய கம்யூ. இடம் பெறும் சூழல் உருவாகலாம் என்றும், அந்த நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் அமைச்சராகலாம் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு மாறாக, மா.கம்யூ. அமைச்சரவையில் பங்கு பெறமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அதன் மாநில செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். இரு கட்சிகளின் நிலைப்பாடுகள் வேறுபடும் நிலையில், ஜூலை 20-ம் தேதி சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அதில் அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து விவாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.