கொல்கட்டா: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் திரிணமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) மூத்த தலைவர் மற்றும் எம்.எல்.ஏ மதன் மித்ரா, ரிதபிரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி அணியில் இணைந்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் டி.எம்.சி கட்சி கடுமையான தோல்வியை சந்தித்த பின்னர், கட்சியின் எம்.எல்.ஏக்களில் பெரும்பாலோர் தனி அணியாக பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அணியை வழிநடத்தும் ரிதபிரதா பானர்ஜிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கமர்ஹதி தொகுதி எம்.எல்.ஏவான மதன் மித்ரா, கொல்கட்டாவில் இயங்கும் டி.எம்.சி-யின் தேசிய மற்றும் மாநில அளவிலான அனைத்து குழுக்களிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். சட்டசபையின் முதன்மை கொறடா பதவியிலிருந்தும் விலகுவதாகவும் தெரிவித்தார்.
அதிருப்தி அணியில் சேர்ந்தபோதும், தாம் டி.எம்.சி-யிலேயே தொடர்வதாக அவர் கூறினார். “நான் அறையை மட்டும் மாற்றினேன்; வீட்டை அல்ல,” எனவும் அவர் விளக்கினார்.
நகராட்சி பணியாளர் நியமன முறைகேடு தொடர்பான விசாரணையில், மதன் மித்ராவின் மனைவி மற்றும் இரு மகன்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய அடுத்த நாளே இந்த மாற்றம் நடந்ததால், மேற்கு வங்க அரசியலில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.





